பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப் பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய சிறந்த அணியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கு முன் வாக்களிப்பதன் மூலம் சிரமத்துடன் கட்டமைத்த பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள் என அனைத்து மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாப்பாஹுவில் நேற்று (04.09) பிற்பகல் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

தபால் வாக்குகள் எனக்கு சாதகமாக இருப்பதாக அறியக்கிடைத்தது. எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த நாட்டில் தேர்தலை நடத்தும் நிலை இருக்கவில்லை. மாறாக எரிபொருள், மருந்து, கேஸ் ஆகியவற்றை தேடி அலையும் காட்சிகளையே காண முடிந்தது.

நாட்டிலுள்ள விவசாயிகள் வழங்கிய பங்களிப்பே அதற்கு முக்கிய காரணமாகும். நான் பொறுப்பேற்ற வேளையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி சரிவடைந்திருந்தது. அமெரிக்கா, உலக வங்கியுடன் பேசி விவசாயிகளுக்கு உரம் பெற்றுக்கொடுத்தேன். விவசாயிகளும் பிரதி உபகாரம் செய்தனர்.

அதற்காக நன்றி சொல்கிறேன். பின்னர் சுற்றுலாத்துறையை பலப்படுத்தி நாட்டை கட்டியெழுப்பினோம். இன்று போட்டியிட வந்திருக்கும் 38 பேரும் நாடு நெருக்கடியிலிருந்த போது நாட்டை மீட்க வரவில்லை.

மக்களுக்கு நன்றிக்கடனாகவே குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணங்களை வழங்குகிறோம். பொருட்களின் விலையை ஓரளவு குறைத்திருக்கிறோம். இன்றும் மக்களுக்கு கஷ்டங்கள் உள்ளன.

எனவே இனிவரும் காலத்தில் நாம் எவ்வாறு முன்னேறிச் செல்லலாம் என்பதை இலக்கு வைத்தே எனது திட்டங்களை முன்வைத்திருக்கிறேன். எனது தேர்தல் விஞ்ஞாபனம் பிரதான ஐந்து விடயங்களை இலக்காக கொண்டதாக அமைந்திருக்கிறது.

வரியைக் குறைத்தால் வௌிநாட்டு கடன்களைப் பெற வேண்டியிருக்கும். மீண்டும் பணம் அச்சிட வேண்டியிருக்கும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்திருப்பதால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும்.

மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக நாட்டின் நெல் உற்பத்தியை அதிகப்படுத்த வழி செய்வோம். நாம் விவசாயிகளை வறுமையையில் வைத்திருக்கும் முயற்சிகளை நாம் விரும்பவில்லை.

உலகின் உணவுத் தேவைக்கு நாம் உணவு விநியோகிக்க வேண்டும். எமது உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்கினால் உலகில் மற்றுமொரு தொகுதியின் உணவுத் தேவைக்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

வறுமையான பிரதேசங்களில் வாழும் மக்கள் கஷ்டத்திலிருந்து மீள முடியும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜேவீபிக்கும் எந்த திட்டமும் இல்லை என்பதை அவர்களின் தேர்தல் விஞ்ஞாபங்களே உறுதிப்படுத்துகின்றன. அவர்களிடம் புதிய திட்டங்கள் இல்லை.

அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல திட்டங்களையும் எதிர்க்கின்றனர். எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் துறை தொழில்களுக்கு புதியவர்களை இணைப்போம். அவர்களுக்கான பயிற்சிகால கொடுப்பனவுக்கும் அரசாங்கம் பங்களிப்புச் செய்யும்.

சுய தொழில் முயற்சிகளுக்கும் அரசாங்கம் நிதி நிவாரணங்களை வழங்கும். விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். சுற்றுலா அபிவிருத்திக்கான திட்டங்களும் எம்மிடம் உள்ளன.

ஜே.ஆர்.ஜயவர்தன, டீ.எஸ்.சேனநாயக்க, பிரேமதாச போன்ற தலைவர்களின் வழியிலேயே நான் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டேன். டீ.எஸ். சேனநாயக்கவை தவிர மற்றைய அனைவரையும் நான் அறிவேன்.

பண்டாரநாயக்கவையும் அறிவேன். பிரேமதாசவிற்கு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் நானே கட்சியைப் பாதுகாக்க வழி செய்தேன்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து கட்சியின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். ஜே.ஆர்.ஜயவர்தனவை போல எனக்கும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

சஜித் பிரேமதாச தற்போது ஐக்கிய தேசிய கட்சி இல்லை.அவரால் அனுகுரமார திசாநாயக்கவை தோற்கடிக்க முடியாது. சஜித் பிரேமதாசவே அனுரகுமார திசாநாயக்கவைப் பலப்படுத்தினார். இதுவரையில் இலங்கையில் ஆட்சி செய்தவர்கள் ஆளும் தரப்பை மிஞ்சி செல்ல இரண்டாம் தரப்புக்கு இடமளிக்கவில்லை.

அதேபோல் எதிர்கட்சிகளும் தம்மை மிஞ்சி செல்ல மற்றுமொரு தரப்புக்கு இடம் கொடுக்கவில்லை. ஜே.ஆர்.ஜயவர்தன, சிறிமாவோ போன்வர்களும் அதனையே செய்தனர்.

நான் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் ஜே.வீ.பிக்கு இடமளிக்கவில்லை. அதனால் அனுரகுமார திசாநாயக்க மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக செயற்பட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜேவீபியை கட்டி வைத்திருந்தோம். சஜித் பிரேமதாசவால் அதனை செய்ய முடியாமல் போனது. பாராளுமன்றத்தில் சென்று வீண் பேச்சு பேசுவார். நாளாந்தம் ஒரு மணித்தியாலம் பேசிக்கொண்டிருப்பார்.

அதனால் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சியினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல் செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது செழிப்பும் இருக்காது  என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here