சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27.08) கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், மடாட்டுகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துபாயில் பல வருடங்களாக வாடகை வண்டி சாரதியாகக் கடமையாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று அதிகாலை 03.20 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 14,800 சிகரெட்டுகள் அடங்கிய 74 சிகரெட்டு காடூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.








