கிளிநொச்சி – இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் குறித்த 34 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








