சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான பிரதிநிதி எவான் பாபஜியோர்ஜியு (Evan Papageorgiou), நேற்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம், நிர்வாகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் ஊழலைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்பாக அவர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும், வரிக் கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் வரி விலக்குகள் குறித்த நடவடிக்கைகள் பற்றியும் அவர் கவனம் செலுத்தினார்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் சமூக பாதுகாப்புக்கான வளங்களின் ஒதுக்கீடு குறித்து அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இந்த சந்திப்பில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, “2026 வரவு செலவுத் திட்டம் மக்களுக்குப் அதிகாரம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம் மக்கள் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும்,” என்றார்.
அத்துடன், தரமான முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருப்பதையும், நீண்டகால நிலைத்தன்மை மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.








