
15 வயது சிறுமியை, தலைமை பிக்கு ஒருவர் உட்பட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
வழக்கு விபரங்களை ஆய்வுக்காக அரசாங்க ஆய்வாளரிடம் சமர்ப்பித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி
சியபத் சசிந்து விக்ரமரத்ன, விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கம்பஹா காவல்துறையிடம் உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அறிவுறுத்தல்களின்படி, நிட்டம்புவ பொலிஸ் பொறுப்பாளர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நேற்று (4) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய மனுக்களில், கிடைத்த தகவலின் அடிப்படையில்,
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு விடுதியில் 15 வயது சிறுமி தனது காதலன் என்று கூறப்படும் ஒருவருடன் தங்கியிருந்ததை பொலிஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டது. இருவரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
இதனை அடுத்து குறித்த சிறுமி மருத்துவ-சட்டப் பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
சமீபத்திய நாட்களிலும்,அதற்கு முன்னரும் பலமுறை சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதாக பொலிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
விரிவான விசாரணையின் போது, அனுராதபுரத்தில் உள்ள ஒரு முக்கிய வழிபாட்டு தளத்தின் தலைமைப் பிக்குவால் தான் முதலில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருந்தார். அதன்பிறகு, தனது காதலனும், உறவினர் (மைத்துனர்) என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து ஒரு விசேட பொலிஸ் விசாரணைக் குழு, அனுராதபுரத்திற்குச் சென்று தலைமைப் பொறுப்பாளரிடம்(பிக்கு) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பின்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
மேலும், சிறுமியின் பெற்றோர் பிக்குவிடம் இருந்து பலமுறை பெரும் தொகை பணத்தை பெற்றிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி விசேட சிறுவர் இல்ல பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.







