ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மீனவ சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் நீண்டகால தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

வட மாகாண கடல் பகுதியில் நிலவும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை மீனவ சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here