செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சிம்மாசனம் ஏறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக இ.தொ.காவும் கம்பீரமாக நிற்கும். அதுமட்டுமல்ல மலையக மறுமலர்ச்சி திட்டத்தை அவரின் ஆட்சியின்கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்வோம் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, நுவரெலியா மாநகரில் நேற்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மேலும் உரையாற்றிய ஜீவன் தொண்டமான், “ஆயிரம் ரூபாவை வாங்கித்தருவோம் என உறுதியளித்தோம். அதனை செய்துகாட்டினோம். தற்போது அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அடிப்படை சம்பளத்தை அதிகரித்துகொடுத்த எமக்கு எஞ்சிய 350 ரூபாவை பெற்றுக்கொடுப்பது எவ்வித பிரச்சினையும் கிடையாது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகும் ரணில் விக்கிரமசிங்கதான் ஜனாதிபதியாக இருப்பார் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இறந்தாலும் மக்களை என்னிடம் தந்துவிட்டு போயுள்ளார். யார் என் பக்கம் நிற்காவிட்டாலும் மக்கள் நிற்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் அவருக்கு தலைமைத்துவம் கிடையாது. மலையக மக்கள் தொடர்பில் புரிதலும் இல்லை. ஏனெனில் அவருடன் இருப்பவர்கள் அப்படிபட்டவர்கள். 50 ரூபாவையே பெற்றுக்கொடுக்க முடியாதவர்கள் 2,500 ரூபாவை பெற்றுக்கொடுப்பார்களாம்.

பிரதேச சபை உருவாக்கம், பிரதேச செயலகம் அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும்போதே செய்தார். எனவே, அவரை நாம் நிச்சயம் ஆதரிக்க வேண்டும்.  நாடு நன்றாக இருக்கவேண்டுமெனில் ரணிலுக்கு புள்ளடி இடுங்கள்.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில்தான் மலையகத்துக்கு உரிமைசார் விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றிபெற்று மீண்டும் அரியணையேறும்போது அந்த வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும். ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளி மலையக மக்கள் என்ற வரலாறு பதிவாக வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here