ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலத்தின் கீழ் சந்தேகநபர்களை தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாக குறைக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக இன்று (09) உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கு முரணான தன்மை குறித்து சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட சட்டத்தில், குற்றக் கும்பல்களுடனான தொடர்புகளை அடையாளம் காண ஒருவரின் பச்சை குத்தல்கள் மற்றும் அடையாளங்கள் தொடர்பான ஏற்பாடுகள் நீக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மேலும், தீவிர குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன்னதாக நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை நீக்கவும் அரசாங்கம் இணங்கியுள்ளது.

முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடர்ந்த நிலையில் இந்த சமீபத்திய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

விசாரணைகளை முடித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மை குறித்த தனது தீர்மானம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதற்கு முன்னர் இன்று, மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் தொடர்பான ஏற்பாடுகளை முற்றாக நீக்கவும், புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான ஏற்பாடுகளை திருத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

தடுப்புக் காவல் உத்தரவுகள் மற்றும் பிணைச் சட்டம் தொடர்பான ஏற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவருவது குறித்து கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் குழு நிலையின் போது அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம், அதன் பல ஏற்பாடுகள் தொடர்பில் சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. மனுதாரர்கள் அவற்றின் அரசியலமைப்பு தன்மை குறித்து தீர்மானம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here