திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் இன்று (நவம்பர் 3) முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார்.
இந்த விஜயம், இலங்கைக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் நடைபெறுகிறது என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
இராஜதந்திர உறவுகளின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ள சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
அதோடு, 2019 ஆம் ஆண்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.








