காவல்துறை, முப்படைகள், சிறைச்சாலைகள் துறை, இலங்கை சுங்கம் மற்றும் குடிவரவு துறை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முடிவு செய்துள்ளது.
இந்த நிறுவனங்களின் சில அதிகாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்திய புகார்களின் அடிப்படையில், உள்ளக விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அதிகளவில் புகார்கள் கிடைப்பதால், உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க ஆணையம் தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதன் முதல் கட்டமாக காவல்துறை மற்றும் முப்படைகளின் சிரேஸ்ட அதிகாரிகளின் சொத்துக்கள் பரிசோதிக்கப்படவுள்ளன. பின்னர், இது கீழ்நிலை அதிகாரிகள் வரை விரிவுபடுத்தப்படும்.
மேலும், வருவாய் ஈட்டும் மற்ற அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புடைய நிறுவனங்களும் கண்காணிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணைகளை விரைவுபடுத்த ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.








