இலங்கையில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விசேட கட்டுப்பாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், டெங்கு பரவலுக்கான சூழலை குறைத்தல் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வை அதிகரிப்பதாகும்.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 5,175 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 6,025 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவை கடந்த ஐந்து மாதங்களில் மிக உயர்ந்த மாதாந்திர எண்ணிக்கையாகக் காணப்படுகின்றன.
சமீபத்திய நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக, டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும், தற்போது வாரத்திற்கு சுமார் 1,500 டெங்கு நோயாளர்கள் மருத்துவ வசதிகளை நாடி வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த மே 19 முதல் 24 வரை, 16 சுகாதார வலயங்களில் 95 பகுதிகள் உள்ளடக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது 128,824 வளாகங்கள் சோதனையடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றும் நோக்கில் நடமாடும் குழுக்கள் அனுப்பப்படும் என்றும், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







