1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த ஒழுங்குவிதம், 2024 ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் தலைமையிலான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இதன்படி, ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு ரூ.3 அனுமதிக் கட்டணம் விதிக்கப்படும்.
இந்த தொகை இலங்கை தேயிலை சபையின் மூலதன நிதிக்குள் சேகரிக்கப்படுவதுடன், தேயிலைத் தோட்டங்களின் வினைத்திறனை மேம்படுத்த, புதிய நடுகைகள், மறுநடுகை, கைவிடப்பட்ட தோட்டங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதி தேயிலையிலிருந்து வசூலிக்கப்படும் “செஸ்” வரியின் வருவாயும், தேயிலைத் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றதா என குழு கேள்வியெழுப்பியது.
ஆனால், அந்த வருமானம் தேயிலை சபையால் பெறப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். குழு தலைவர், ஏற்றுமதி அபிவிருத்திக்காக பெறப்படும் வருவாயை சம்பந்தப்பட்ட துறைகளின் மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
1927ஆம் ஆண்டின் நாணய மாற்றுண்டியல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமூலத்துக்கும் குழு அங்கீகாரம் வழங்கியது. இத்தரத்தில், மோசடி தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், மின்னணு காசோலை பயன்பாட்டையும் எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பாராளுமன்ற செயற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தும் முயற்சி பரீட்சார்த்தமாக வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.








