தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும் எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள்,பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடைசெய்யும் தேர்தல்கள் ஆணைக்குழு சமய செயற்பாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் (21) தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லையெனக் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும் ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு நிறுவனம் என ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்துத் தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here