நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரையில் பயன்படுத்த போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதேவேளையில், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்திற்கான கோரிக்கைகள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை நேற்று (15) தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவைகள் தடையின்றி செயற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற ஆறாவது கூட்டத்தின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது,நீண்டகால எரிசக்தி முகாமைத்துவ நடவடிக்கைகள், எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சாரப் பாதுகாப்பு முயற்சிகள்மற்றும் எரிசக்தி சேமிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையை எதிர்காலத்தில் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முறையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிப்பது மற்றும் மேலதிக எரிபொருள் சலுகைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றன.







