விசர் நாய்க்கடி நோயை ஒழித்து  நாய் இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இலங்கையில் உள்ள நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்தி, உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விசர் நாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய் பதிவு சட்டமூலம்”

செப்டம்பர் மாதம் பத்திரிகையில் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட இந்த சட்டமூலம், ரேபிஸ் தடுப்பூசி, நாய் பதிவு, இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வணிக ரீதியான நாய் வளர்ப்பு ஆகியவற்றுக்கான புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது.

தற்போதுள்ள விசர் நாய்க்கடி அவசரச் சட்டம் மற்றும் நாய் பதிவு அவசரச் சட்டம் இதன் மூலம் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

கட்டாய தடுப்பூசி + பதிவு
ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபையும் தங்கள் பிரதேசத்தில் உள்ள நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆண்டுதோறும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 6 வாரங்களுக்கு மேற்பட்ட நாய்களை கொண்ட உரிமையாளர் தடுப்பூசி + பதிவை கட்டாயம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்திய பின், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி உள்ளூர் அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் பதிவு இலக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அபராதம்
அதிகாரியிடம் செல்லுப்படியான தடுப்பூசி/பதிவு சான்றிதழை வைத்திருக்க தவறினால் 14 நாட்கள் அவகாசம். காரணம் இருந்தால் மேலும் 14 நாட்கள். அதற்குள் செய்யாவிட்டால் பதிவு கட்டணத்துடன் ரூபாய் 2,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள்
தெரு நாய்களை உள்ளூர் அதிகார சபைகள் கருத்தடை செய்ய வேண்டும். குணமடைந்த பின் பிடித்த அதே இடத்தில் விட வேண்டும்.

வணிக நாய் வளர்ப்பு 

வணிக ரீதியான நாய் வளர்ப்பு நிலையங்களுக்கு உள்ளூர் அதிகார சபையின் அனுமதி கட்டாயம் என்றும் பரிசோதனை மற்றும் விலங்கு நல விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விதிமீறினால் ரூ. 10,000 அபராதம் அல்லது 2 மாதம் வரை சிறை  அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும்

ஏனைய குற்றங்கள்
– பொது இடத்தில் நாயை கைவிட்டால் 10,000 அபராதம்  அல்லது 3 மாதம் வரை சிறை விதிக்கப்படும்.

– விசர் நாய்க்கடி பாதித்த/சந்தேக நாய்கள் தொடர்பான குற்றங்களுக்கும் இதே தண்டனை விதிக்கப்படும்.

– தங்கள் நாய் ஒருவரை கடித்தாலோ, வேறு விலங்கை தாக்கினாலோ உரிமையாளர் சட்டப்படி நஷ்டஈடு கொடுக்க கடமைப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் பிராந்திய விசர் நாய்க்கடி நோய் ஒழிப்பு ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நாடளாவிய நாய் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின்னரே சட்டமாகும்.

வர்த்தமானி  ⬇️
PL15888 Rabies (E)_1788782380

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here