நாளை (20) முதல் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ.41 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.42 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (19) குலியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இதனை குறிப்பிட்டார்.
முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும், தொடர்புடைய அதிகாரிகளும் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு சோள உற்பத்தி, முட்டை மற்றும் கோழி தொழிலுக்கு தேவையான அளவுக்கு போதுமானதாக இல்லை எனவும் சரத் ரத்னாயக்க தெரிவித்தார்.
சோளத்திற்கு பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதால் கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், செரிமான அமைப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முட்டை உற்பத்தி 20% தொடக்கம் 30% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், சில மோசடி வியாபாரிகள் கால்நடை உணவில் பல்வேறு இரசாயன பொருட்கள் மற்றும் மருந்துகளை கலப்பதால் அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார்.
இந்த நிலைமையால் விவசாயிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய தீர்வு திட்டம் எதுவும் செயல்படுத்தப்படுவதாக தெரியவில்லை என்றும் சரத் ரத்னாயக்க கூறினார்.








