ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டமை தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு, பொது நிதிக் கட்டுப்பாடு சீர்குலைந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறி என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபை மூலம் மேலதிகமாக சுமார் 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது, பொதுமக்களின் வரிப் பணத்தின் மீது காட்டப்படும் பொறுப்பற்ற தன்மையை மேலும் அம்பலப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பொது நிதி நிர்வாகத்தில் தற்போதுள்ள அனைத்துக் கட்டுப்பாடு மற்றும் சமநிலை வழிமுறைகளையும் மீறி இந்தப் பணம் பொதுமக்களின் கைகளுக்குச் சென்றிருப்பது ஒரு தீவிரமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம், திறைசேரி இப்போது நிதி ஒழுக்கமற்ற ஓர் நிறுவனமாக மாறிவிட்டது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
248 மில்லியன் ரூபாய் மட்டுமல்ல, 500 மில்லியன் தவறாகப் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.மேலும் இது குறித்து பாராளுமன்ற விசாரணையை நடத்துமாறு அந்த அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக மேலதிகமாக 248 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஏற்று கொண்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளுக்கு மேலதிக பண்டிகை கொடுப்பனவு வழங்குமாறு அரசாங்கம் கூறிய நிலையில் பணம் அனுப்ப மிகக் குறைந்த காலமே காணப்பட்டதால் நெருக்கடி நிலை உருவானது.
இதன் காரணமாக அதிகாரிகள் வழக்கமான கணினி அமைப்புக்கு மேலதிகமாக பணியாற்ற வேண்டியிருந்தது.இந்த நிலையில் பணம் செலுத்தும் கோப்பு தவறுதலாக இரண்டு முறை பதிவேற்றப்பட்டது. இதனால் சில “ஏழை” பிரிவினருக்கு ஏப்ரல் மாதத்திற்கான பணம் இரண்டு முறை வழங்கப்பட்டது என நிதியமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
மொத்தமாக 1.7 மில்லியன் குடும்பங்கள் அஸ்வெசும பெறுகின்றன.இந்த நிலையில் அனுப்பிய பணத்தை வங்கிகள் நிறுத்துவதற்கு முன்பாக 49,759 பேர் மேலதிக பணத்தை எடுத்துள்ளனர்.
இவ்வாறு 248.7 மில்லியன் ரூபாய் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்ச குறிப்பிட்டுள்ளது.








