அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மெட்ரோ பேருந்துத் திட்டம் இலங்கை போக்குவரத்துச் சபையால் (SLTB) வேறு பெயரில் செயல்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது நாட்டின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேலும் சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார்.
“இலங்கையில் பயணிகள் போக்குவரத்து அழிக்கப்பட்டதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையே காரணம். இப்போது, மெட்ரோ பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த அரசாங்கம் மீண்டும் அதே செயல்பாட்டை முன்னெடுக்கிறது. இவ்வாறே திறைசேரியும் அழிக்கப்படுகிறது. இது ஒரு தேசியக் குற்றம் ஆகும்,” என்று விஜேரத்ன கூறியுள்ளார்.
அத்துடன் புதிய பேருந்துகள் பொதுப் போக்குவரத்தில் உள்ள அமைப்பு ரீதியான திறமையின்மைகளைச் சரிசெய்யாது என்றும், மாறாக வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து, கடந்தகாலத் தோல்விகளையே மீண்டும் உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








