உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறித்த சங்கத்திற்கு நீதியமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, இன்று (29) பிற்பகல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விசேட கலந்துரையாடலை நடத்தியதைத் தொடர்ந்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்த ரஜீவ் அமரசூரிய,  கலந்துரையாடல் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

இதன்போது குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை தற்சமயம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு  கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இது குறித்து ஜனாதிபதிக்கு தெரிவித்து, அது தொடர்பான அவரது தீர்மானத்தை தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இதன்போது நீதியமைச்சர் கூறியதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here