பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசுபொருளானது.
1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், பட்டலந்தை வீடமைப்பு தொகுதியில் இயங்கியதாகக் கூறப்படும் சித்திரவதைக் கூடம் தொடர்பில் விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில், 1988-89 வன்முறை காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவில் உறுப்பினராக இருந்த, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம், நேற்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, 31 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தினார்.
ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்லாது இந்த சட்டவிரோத வதைக் கூடத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எனச் சகலரையும் சட்டத்தின் முன்னிறுத்தி, நீதியை நிலைநாட்டுவதற்கான பின்னணியொன்றை தற்போதைய அரசாங்கம் உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








