மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (21.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கடந்த 2005 ம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்றைய சந்தேக நபர் அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டிட ஒப்பந்தகார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேச வீதி ஒன்றில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலேசாசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலாக குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் தடை செய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான 4 கஜமுத்துக்களுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட போது அங்கு மாறு வேடத்தில் இருந்த பொலிஸார் சுற்றிவளைத்து அவரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்தவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








