இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது.

பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

தொடர்ந்து குண்டுகள் வந்து விழுந்ததால், காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் தரப்பில் நிறைய உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல்களின் விளைவாக 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான பீரங்கி மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here