வீதித் தடுப்பில் நிறுத்தாமல் உத்தரவை மீறி சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த பாரவூர்தி அம்பலாந்தோட்டையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நோக்கிச் சென்ற இந்த பாரவூர்தி மீது சந்தேகத்தின் பேரில், அம்பலாந்தோட்டை மணிக்கூண்டுக்கு அருகில் உள்ள வீதித் தடுப்பில் நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.
ஆனால், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பாரவூர்தி தப்பிச் செல்லும் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாரவூர்தியின் பின்னால் துரத்திச் சென்று பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சந்தேகநபர்கள் யக்கஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள காணிக்குள் பாரவூர்தியை நிறுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், பொலிஸார் அதிகாரிகள் பாரவூர்தியை சோதனையிட்ட போது, அங்கு மனிதாபிமானமற்ற முறையில் 27 மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








