யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மாணவி வித்தியாவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமைக்காக தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (25) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்கள் அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கு தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு நான்கரை ஆண்டுகளுக்கும் மேலான காலம் எடுத்ததாகக் குறிப்பிட்டு, விசாரணையை விரைவில் முன்னெடுக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மேன்முறையீட்டு மனுக்களை எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.
2015 மார்ச் 3 ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பில் “சுவிஸ் குமார்” உள்பட ஏழு பிரதிவாதிகளுக்கு 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
ஆனால், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டத்திற்கு முரணானது எனக் குற்றவாளிகள் வாதித்து, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.







