இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சுமார் 7000 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.6 மில்லியன் மாணவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் ஒரு மாணவருக்கு தலா 110 ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை அதிகரிப்பு காரணமாக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த தொகையில் உணவை வழங்குவது கடினமாகியுள்ளது.
உணவை தயாரித்து விநியோகிப்போர் சமுர்த்தி பயனாளிகள் என்பதால் இந்த சுமையை அவர்களால் ஏற்க முடியாதுள்ளது.
எனவே மாணவர்களின் போஷாக்கு மட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு மாணவருக்கு ஒதுக்கப்படும் உணவுக்கான தொகையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







