இலங்கையின் 10 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் தேர்தல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.

பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 56 வேட்புமேனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

அதில் 22 அரசியல் கட்சிகளினதும், 27 சுயேட்சைக் குழுக்களினதுமாக மொத்தம் 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இம்முறை 392 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

ஒரு அரசியல் கட்சியினதும், 6 சுயேச்சை குழுக்களினதுமாக மொத்தம் 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தபால் மூலமாக வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 14,222 பேர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் 14,003 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாக, மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் கண்காணிப்புக்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு, கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here