முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மதியம் மன்னாரில்  ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி   ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் முக்கியஸ்தர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக  சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் சஜித் தோற்பார் என்று தெரிந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ எந்த விதத்திலும் பாதிக்காது என  தெரிவித்திருந்தனர்.

இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here