‘மலையக அதிகார சபை’ என அறியப்படும் பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மூடுவதற்கான தீர்மானம் நடைமுறைக்கு வராது என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்ததாவது:
“மலையக மக்கள் கல்வி, காணி, வீடு, சுகாதாரம், சமூக மேம்பாடு, வருமானம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் பின் தங்கியுள்ளனர். இந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்த முறையில் தீர்க்கும் நோக்கில், எங்கள் நல்லாட்சிக் காலத்தில் 2018 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது.
ஆனால், ஒரே பணியைச் செய்யும் நிறுவனங்களை மூடுவதற்கான அரசின் தீர்மானத்தில் இந்த சபையும் சேர்க்கப்பட்டது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். இந்நிலையில், அமைச்சர் சமந்த வித்யாரத்ன, மலையக அதிகார சபையை மூடமாட்டோம் என எனக்கு தனிப்பட்ட முறையில் உறுதி அளித்துள்ளார்.
இப்போது அவர் அமைச்சரவை குறிப்பு ஒன்றை சமர்ப்பித்து முந்தைய முடிவை வாபஸ் பெறுவார் என நம்புகிறேன். இது எமக்கு கிடைத்துள்ள ஆர்ப்பாட்டமில்லா வெற்றி ஆகும்” என்று அவர் குறிப்பிட்டார்.







