மீலாத்-உன்-நபி திருநாளை முன்னிட்டு இலங்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உடைந்த உள்ளங்களை குணப்படுத்தி, வெறுப்புக்கு பதிலாக அன்பையும், பிளவுக்கு பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபி அவர்கள் காட்டிய ஈடு இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையை ஒளிரச் செய்யும் என தனது நம்பிக்கையை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது,

இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ‘ரபி அல்-அவ்வல்’ மாதம் பிறந்ததும், உலக இஸ்லாமிய பக்தர்கள் தியாகத்தை முன்னிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் புனித முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமான மீலாத்-உன்-நபி இன்று (26) அமைந்துள்ளது.

சமத்துவ சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இது, வெறும் விழாவை தாண்டிய ஆழமான ஆன்மீக மேம்பாட்டை எதிர்பார்க்கும் கொண்டாட்டமாகும்.

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் பாதையை வெளிப்படுத்திய முஹம்மது நபி அவர்கள், மனித குலத்திற்கு எல்லா காலத்திலும் தோன்றிய மிகச் சிறந்த ஆசிரியர் ஆவார்.

23 ஆண்டுகளாக அவர்கள் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்கள் மற்றும் செய்த ஈடு இணையற்ற தியாகங்களின் நோக்கம், அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலவும் ஒரு நல்ல சமூகத்தை கட்டமைப்பதாகும்.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அவர்கள், மொத்த மனித இனமும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்றும், அதன் உண்மையை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத பண்புகளால் மட்டுமே அளவிட முடியும் என்றும் தெளிவுப் படுத்தினார்கள்.

மனிதனின் உள்ளார்ந்த தூய்மை மற்றும் சமூக ஒழுக்கத்தை கெடுக்கும் அனைத்து விடயங்களையும் இஸ்லாம் மார்க்கம் நிராகரிக்கிறது.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள மீலாத்-உன்-நபி திருநாள் அமையட்டும்! என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here