இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) கைப்பற்றிய வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், 330 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான, அடிக்கல் நாட்டு விழா நேற்று (25) நடைபெற்றது.

அரசாங்கம் கைவிட்ட திட்டத்திற்கு மாற்றீடாக, உள்ளூர் அதிகார நிறுவனங்களுக்கு அதிகாரமும் வளங்களும் வழங்கப்படும்போது எவ்வாறு சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் ராசமாணிக்கம் இதன்போது தெரிவித்தார்.

தமிழரசு கட்சி அபிவிருத்திக்கு எதிர்ப்பு என தெரிவிப்பது, பொய்யான விடயம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னதாக யாழ். பழைய பூங்காவில் 170 ரூபாய் மில்லியனில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த இடம் 1853 ஆம் ஆண்டிலிருந்து தர்ம நிதி சொத்து என்பதால் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அந்த பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“ஒரு இடத்தில் சட்ட ரீதியான பிரச்சினை இருக்கும்போது, திட்டத்தை கைவிட்டு குற்றம் சுமத்துவதற்கு பதிலாக மாற்று இடத்தை கண்டுபிடிப்பதே தெளிவான தீர்வு” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபை நிதியில் அமைக்கப்படும் இந்த புதிய வசதி, வலிகாமம் தெற்கு இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நவீன வசதிகளை வழங்கும்.

அத்துடன் இது யாழ். மாவட்ட விளையாட்டு உட்கட்டமைப்பிற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.

மேலும், 330 ரூபாய் மில்லியன் பொதுப் பணத்தில் கட்டப்படும் கட்டிடத்தை பாதுகாக்க நீண்ட கால பராமரிப்பு நிதி ஒன்று அவசியம் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்வில்
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தலைவர் T. பிரகாஷ், தமிழரசு கட்சி தலைவர் C.V.K. சிவஞானம், பொதுச் செயலாளர் M.A. சுமந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் S. சுகிர்தன், யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஏனைய உள்ளூர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here