முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொள்ள அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியபோது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர், நீதிமன்றம் அவரை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

வைத்திய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை இன்று (29) மீண்டும் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here