முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் சட்ட அதிகாரி பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அரச இதழான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவிடம் விசாரணைகளை மேற்பார்வையிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டால் உயிரிழப்பு ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், அது தற்கொலையா அல்லது தவறுதலாக ஏற்பட்ட துப்பாக்கி வெடிப்பா என்பது இன்னும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலமே உண்மை வெளிவரும் என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
விக்கிரமரத்னவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதுகு வழியாக வெளியேறியுள்ளது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவரது பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான சர்ஜன்டுக்கு சொந்தமானதாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைக்கிள் பயிற்சிக்கு செல்வதற்கு முன் துப்பாக்கியை பரிசோதிக்க வேண்டும் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் கோரியதாகவும், அதன்பின் தண்ணீர் போத்தல்களை எடுக்க சர்ஜன்ட் உள்ளே சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் சர்ஜன்ட் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போது விக்கிரமரத்னவின் மனைவியும் இளம் மகனும் வீட்டில் இருந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் வெளியே வந்து பார்த்த சந்தர்ப்பத்தில், அவர் கீழே விழுந்து கிடந்ததுடன் அருகில் துப்பாக்கியும் இருந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிக் கிரியைகள் இன்று (20) முழு பொலிஸ் மரியாதையுடனும், அரச மரியாதையுடனும் நடைபெறும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.






