பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேசிய வேதன நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் தொழில் ஆணையாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பான தேசிய வேதன நிர்ணய சபை கடந்த 3 ஆம் திகதி கூடியது. இதன்போது தீர்மானம் எதுவுமின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த மாதம் வேதன நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வர்த்தமானி வெளியிடப்பட்டது.

நாளாந்தம் அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கி இருப்பதாகத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

எனினும் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவாகக் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவும் வழங்குவதற்கு இணங்கப்பட்டதே தவிர, மேலதிக கொடுப்பனவுகள் எதனையும் வழங்க இணக்கம் தெரிவிக்கவில்லை என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி இம்மாதத்துக்கான வேதனம் பழையபடி நாளாந்தம் 1,000 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கணித்து வழங்கப்படும் என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் குறித்துத் தீர்மானிப்பதற்காகத் தேசிய வேதன சபை ஒன்றுகூடியது.

இதன்போது 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு நிறுவனங்கள் இணங்கிய போதும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க இணங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here