யாழ்ப்பாண நகரம் தற்போது அதிக நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற போக்குவரத்து சவால்களை சந்தித்து வருவதால், அதனை சீரமைப்பது அனைவரின் பொறுப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14.10.2025) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்டச் செயலர் ம. பிரதீபன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், “யாழ்ப்பாண நகரத்தில் பேருந்து நிலையம், மருத்துவமனை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் நகர வளர்ச்சி தடைப்படுகிறது. மற்ற நகரங்களைப் போல யாழையும் திட்டமிட்ட முறையில் மாற்ற வேண்டும். அதற்காக புதிய, பழைய பேருந்து நிலையங்களின் சேவைகளை ஒழுங்குபடுத்தி நகர நெரிசலைக் குறைக்க வேண்டும்,” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து செயற்குழுத் தலைவருமான க. இளங்குமரன் கூறியதாவது: “பொதுப் போக்குவரத்து மக்களின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்துச் சபைகள் இணைந்து செயல்பட வேண்டும். அதன்படி யாழ்ப்பாணத்திலும் ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்பட வேண்டும்.”
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், “பேருந்து நிலையம் யாழ். நகர மையத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்,” என்று குறிப்பிட்டார்.
இதற்கு இணங்க, குறுந்தூர சேவைகள் தற்போதைய நிலையத்திலிருந்தும், நெடுந்தூர சேவைகள் புதிய நிலையத்திலிருந்தும் இயக்கப்படுமானால் நகர நெரிசல் குறையும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதையே யாழ். பிரதேச செயலர் சா. சுதர்சனும் ஆதரித்தார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே. கேதீசன், “தற்போதைய பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள 63 கடைகளிலிருந்து தினமும் 500 ரூபா வீதம் வசூலிக்கப்படுகிறது. தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் நிலையம் புனரமைக்கப்படும் போது இக்கடைகள் அகற்றப்படும்,” என்றார்.
மேலும், புதிய நிலையத்திற்கு மாற்றம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் கூறினார்.
கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தது. இறுதியாக, புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வதற்கான கள ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், போக்குவரத்து அதிகார சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







