வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (26.11.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர் நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளை (27.11.2024) நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு பரீட்சார்த்தியும் பாதிக்கப்படவில்லை எனவும், பரீட்சார்த்திகளுக்கு தேவையான வாகன வசதிகள் ஒவ்வொரு மாவட்டச் செயலகத்தாலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும் வடக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு மாவட்டச் செயலர்கள் மூலம் எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த மன்னார் மாவட்டச் செயலர், மழை காரணமாக 12, 629 குடும்பங்களைச் சேர்ந்த 43,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 1,547 பேர் 18 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 5,000 ஹெக்டேயர் வரையில் நெல் வயல்கள் இதுவரை அழிந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கட்டுக்கரை குளம் நிரம்பிய நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்காக நானாட்டான் பிரதேசத்தில் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், வெள்ள அபாயமுள்ள பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் அங்கு தங்கியிருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்குரிய ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலர் மேலும் குறிப்பிட்டார். பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்வது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு ஆளுநர் இதன்போது அறிவுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர், 135 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 129 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர், மக்களை பார்வையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தண்ணிமுறிப்புக்குளம், முத்தையன்கட்டு குளம் என்பன திறக்கப்படும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாந்தை கிழக்கில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 536 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்டச் செயலர், அவர்களில் 52 குடும்பங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். கௌதாரிமுனையிலிருந்து பூநகரி மத்திய கல்லூரிக்கு பரீட்சைக்கு தோற்றும் 6 பேருக்கு வாகன ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

ஏ-9 வீதியின் மேற்கு பக்கமாக உள்ள 5 குளங்களில் 2 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதாகவும் இரணைமடுக்குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அதை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் இப்போதே எடுக்கப்படுவதாகவும் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் அவற்றில் ஓமந்தைக்குளம் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் எஞ்சிய 2 குளங்களும் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

143 சிறு குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன என்றும், 200 குளங்கள் வான் பாயும் நிலையை எட்டியுள்ளன எனவும் மேலதிக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,040 குடும்பங்களைச் சேர்ந்த 7,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிலையங்களில் எந்தவொரு குடும்பங்களுக்கு தங்கவைக்கப்படவில்லை எனத் தெரிவித்த மேலதிக மாவட்டச் செயலர், இன்று மாலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரலாம் எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கையை வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலர் அறிவுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியனவற்றின் எந்தவொரு வீதிகளும் இதுவரை தடைப்படவில்லை என திணைக்களப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பரீட்சை விடைத்தாள்களை கொண்டு வருவதற்கும், வினாத்தாள்களை கொண்டு செல்வதற்கும் இப்போது கடற்படையினரின் உதவியே பெறப்படுவதாகவும், கடலில் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப் படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், தமது ஆளுகைக்கு உட்பட்ட 54 குளங்களில் 25 குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன, என்றார். இதேவேளை வடக்கு மாகாணத்தின் பிரதான மூன்று குளங்களிலும் அதன் 50 சதவீத கொள்ளவை எட்டியுள்ளன என்றும் அவற்றை எதிர்காலத்திலும் கிடைக்கப்பெறும் மழை வீழ்ச்சியை கருத்தில்கொண்டு இப்போதே திறந்து விடத்தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடர்நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு சகல தரப்பினருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here