வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
தமக்கு நெருங்கியவர்களுடன் தொடர்புடைய சில விசாரணைகள் அதிகாரிகளால் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இதனை கருத்தில் கொண்டு, அனைத்து நிலுவை விசாரணைகளும் விரைவில் நிறைவு பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், பாடசாலைகளில் தேவையற்ற வகையில் பணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.








