வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயது மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அனுராதபுரம் ஜயசிறிபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனினும், சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மாணவரின் உறவினர்கள், அவரது திடீர் மரணத்திற்குப் பகிடிவதையே (Ragging) காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மாணவரின் மரணம் குறித்து பூவரசங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மரணத்திற்கான துல்லியமான காரணம், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் மட்டுமே உறுதிப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் மாணவர் பகிடிவதை (ragging) தொடர்பான சர்ச்சைகள் தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் அதனை மையப்படுத்திய முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இந் நிலையில்
உயர்கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த அவர், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மூலம் அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் வவுனியா பல்கலைக்கழகமும் உள் விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“தற்போது கிடைத்த தகவலின்படி, மது அருந்தியதன் விளைவாக ஏற்பட்ட அதிகப்படியான வாந்தியே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், மது அருந்தியதற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. அதைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.
மேலும் அவர், “இந்த மரணம் பகிடிவதை (ragging) அல்லது வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையது என உறுதியாகின், அதை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்க அமைச்சின் விசாரணைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும்,” எனவும் குறிப்பிட்டார்.
சில அறிக்கைகள் படி, சிரேஸ்ட மாணவர்கள் புதிய மாணவர்களை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்ததாகவும் வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








