வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் உள்ளிட்ட மற்றைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது,
இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.
நேற்று (26) காலை கெகிராவ பகுதியில் இரண்டு ஆண் சந்தேகநபர்களும், ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர். அதேவேளை, தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபர் மஹரகமவின் நாவின்ன பகுதியில் நேற்று மாலை, விசேட விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தக் கொலை தொடர்பான முழு விசாரணையும் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.
இதற்காக, தென் மாகாணம் மற்றும் மேல் மாகாண பொறுப்பில் உள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை அதிகாரிகள், விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாண தெற்குப் பிரதி பொலிஸ்மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவு பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவு பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் இணைந்து விசாரணை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளனர்.








