தலவத்துகொட பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் நுழைந்து, ஊழியர்களை மண்டியிட வைத்து சுமார் 8 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவரும் மற்றும் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் வாகனம் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
செப்டெம்பர் முதலாம் திகதி முகத்தை மூடிக்கொண்டு கூரிய ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, சொத்துக்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் சுமார் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முல்லேரியா வைத்தியசாலை வீதி பகுதியில் குறித்த பிரதான நபர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னர் குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தில் துணை முகவராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
அதிக கடனில் இருந்த அவர், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டியிருந்த நிலையில் அதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் முல்லேரியா பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில், நிறுவன உரிமையாளர் சந்தேக நபருக்கு பணம் கொடுக்காமல் தவிர்த்தமை தொடர்பில் பகிரங்கமாக சாடியுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட கடும் அவமானம் மற்றும் அதிக கடன் சுமை காரணமாக ஏற்பட்ட வெறுப்பினால் இந்த கொள்ளையை திட்டமிட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றத்திற்கு, வேறு சிலரின் உதவியை நாடியுள்ளதுடன் அவர்களையும் குற்ற செயலுக்கு பயன்படுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








