16 வயதுக்கு மேல் பாடசாலை கல்வியை தொடரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய கவலை வெளியிட்டுள்ளார். 13 வருட கல்வியையும் பூரணமாக பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், 16 வயது வரை கட்டாய கல்வி சட்டத்தால் நிறுவப்பட்டிருந்தாலும், சிறுவர்களை பாடசாலை முறைமையில் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக மாறி வருவதாக கூறினார்.
13 வருட கல்வியை பூர்த்தி செய்யாது பாடசாலையை விட்டு வெளியேறும் சிறுவர்கள் போதிய திறன்களும் தகைமைகளும் இன்றி தொழிலுக்கு செல்ல நேரிடும். இதனால் அவர்கள் சுரண்டல் மற்றும் பிற அபாயங்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2026 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்று, சிறுவர்கள் பாடசாலையில் தொடர்ந்து கற்க ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான கற்றல் சூழலை உருவாக்குவதாகும் என பிரதமர் மேலும் கூறினார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டில் ஆரம்ப பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலைகளில் ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவை வழங்குவதற்கான C2 மையங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பகால குழந்தை கல்வி, போஷாக்கு மற்றும் பாடசாலை போக்குவரத்து ஆகியவற்றிலும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மீது அதிக கல்வி அழுத்தங்களை சுமத்த வேண்டாம் எனவும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். சிறுவர்களுக்கு ஓய்வெடுக்கவும் மீண்டு வரவும் போதுமான நேரம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.








