நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன நிர்வாக பணிப்பாளர் கூறியதாவது:
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் 600 மில்லியன் டொலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 21 சதவீத நிதி பற்றாக்குறை எதிர்கொள்ள நேரிடும்.
இது குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், மருத்துவ சேவை நெருக்கடிகளை ஜெனீவாவில் நன்கொடையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆலோசித்தனர். முக்கிய நிதி வழங்கும் நாடான அமெரிக்கா இல்லாமல் எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் விவாதித்து வருகின்றனர்.
நிதி பற்றாக்குறையால், 70 நாடுகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும். அடிப்படை சிகிச்சை, தடுப்பூசிகள், மகப்பேறு பராமரிப்பு போன்றவை கிடைக்காததால், கோடிக் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர்.
ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. நிலைமை மோசமாவதை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








