விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவர் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றை கிரிஷ் நிறுவனத்திற்கு பெற்றுக்கொள்வதற்கும் அதற்கான அனுமதியை விரைவாக பெற்றுக்கொள்வதற்கும் உதவி வழங்கியதற்காக 3 சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு குறித்த இலஞ்ச பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன கடந்த 24ம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அவர் ஒக்டோபர் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், அந்த சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் வாக்குமூலம் பெற இலஞ்ச ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கினார்.
இதற்கமைய இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் குழு ஒன்று இன்று (25) காலை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்று நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ததாக இலஞ்ச ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.







