அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றும் நோக்கில் அரசாங்கம் விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “செயிரி வாரம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் 1 முதல் 4 வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலில் தங்கள் கடமைகளைச் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு, தேவையற்றவை அப்புறப்படுத்தப்பட உள்ளன.
அதேபோல், “செயிரி வாரம்” நடைமுறையில் அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் வழிகாட்டுதல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.







