கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் மொத்தமாக 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
இந்த ஆண்டு தற்போது வரை பதிவாகியுள்ள விபத்துகள் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த வருடங்களைவிட கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள் விபத்துகள் மிகவும் அதிகரித்துள்ளன. இவ்வகைப் பிரிவில் மட்டும் 923 விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அதில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்களில் பெரும்பாலானவை வேகமாக, கவனக்குறைவாக, மற்றும் பாதைகள், விதிமுறைகள் குறித்து அலட்சியமாக வாகனம் செலுத்தும் நிலைமைகளால் ஏற்படுகின்றன.
இதை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 70 அதிவேக கண்டறியும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவை போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இறப்புகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட அமுலாக்கம், சாரதிகளின் பொறுப்புணர்வு, மற்றும் பொது விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வீதிகளில் அதிகம் நடக்கும் துயர சம்பவங்களைத் தடுக்க, மேம்பட்ட வீதி பாதுகாப்பு திட்டங்கள் இப்போதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல கூறினார்.








