மன்னார் நகரில் காற்றாலை மின்கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நேற்று (01.10.2025) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, மக்களின் எதிர்ப்பை மீறி, திட்டத்திற்கான உபகரணங்கள் நகருக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராகட் அமைதிப் போராடம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதுடன், மூன்று பேர் காயமடைந்து மருத்துவசிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
செவ்வாய்கிழமை (Sep 28) அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் ரூ.5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக கூடுதல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் நேற்று சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது, அவர்களுக்கும் அதே நிபந்தனைகளில் பிணை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.








