போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க சமீபத்தில் கூறியதை சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) கடுமையாக கண்டித்துள்ளது.

அத்தோடு இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை இத்தகைய நடவடிக்கைகள் தீர்க்காது என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவை  பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் சேனக பெரேரா,

மரண தண்டனையை அமுல்படுத்த மாட்டோம் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது .

அத்துடன் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த பரிந்துரைத்த ஆணையாள்ர் ஜகத் வீரசிங்கவின் கருத்துக்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சிறைச்சாலை ஆணையாளர் அரசின் கொள்கைக்கு மாறாக கருத்து தெரிவிப்பது கவலைக்குரியது. மரண தண்டனையை ஆதரிக்கும் ஒருவர் நீதியை நிலைநாட்டவோ, கைதிகளை மறுசீரமைக்கவோ முடியாது.

மேலும், தற்போது நாட்டின் சிறைகளில் 36,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாகவும், அதில்  சுமார் 10,500 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றச் செயல்கள் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையிலிருந்தே உருவாகின்றன. குற்றத்தின் மூல காரணங்களைத் தீர்க்காமல் சமூகத்தைச் சீர்செய்ய முடியாது. தண்டனைக்கு பதிலாக மறுசீரமைப்பே முக்கியம் என சேனக பெரேரா மேலும் வலியுறுத்தினார்

கைதிகளும் மனிதர்களே  என்ற கோட்பாடு வெறும் சொல்லாகவே இருக்கிறது; அதற்கு உண்மையான அர்த்தம் கிடைக்க வேண்டும் என்றால், கைதிகளின் நீதியும் கண்ணியமும் பறிக்கப்படும் செயல்களை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here