நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக, குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேதங்களைக் குறைக்கவும், மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தலின்படி, இடியுடன் கூடிய மழையின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்க்குமாறும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சீரற்ற வானிலை நிலவும் போது, நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த வெளிப் பகுதிகளில் தங்குவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, கம்பிவழித் தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவதையும், மிதிவண்டிகள், ட்ரக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பிகளால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
அவசர காலங்களில், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.








