2024-ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெறவிருந்த டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், இன்று (28) தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
‘பெரான் ஏ’ (Beran A) என அடையாளம் காணப்பட்ட குறித்த ஒஸ்ட்ரியா நாட்டு பிரஜைக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசத் தரப்பு சட்டத்தரணிகள், அந்த நபர் மீது பல்வேறு பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளையும் விசாரித்தனர். எனினும், அவர் எந்தெந்த குற்றச்சாட்டுகளுக்குத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது அறிவிக்கப்படவில்லை.
வியன்னாவில் சூப்பர்ஸ்டார் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டினால் நடத்தத் திட்டமிட்டிருந்த மூன்று இசை நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சிக்கு ஒரு நாளுக்கு முன்னதாக, ஒகஸ்ட் 7, 2024 அன்று பெரான் ஏ. கைது செய்யப்பட்டார்.
டெய்லர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல், அமெரிக்க உளவுத்துறையின் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஏற்பாட்டாளர்கள் மூன்று நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தனர்.
வியன்னா அரசு சட்டத்தரணிகள் 2024-ல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த ஒஸ்ட்ரியா நபர் பிரச்சாரப் பொருட்களைப் பகிர்ந்ததன் மூலம், “இஸ்லாமிய அரசு” என்று அழைக்கப்படும் பயங்கரவாதக் குழுவிற்குத் தனது விசுவாசத்தை அறிவித்ததாகக் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், மற்றொரு ஸ்லோவாக்கிய நபருடன் சேர்ந்து மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டமை, மெக்காவில் கத்தித் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்றாவது நபருக்கு உதவியமை தொடர்பாக பெரான் ஏ மீது சட்டத்தரணிகள் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
எவ்வாறாயினும் டுபாய் மற்றும் இஸ்தான்புல் உட்பட மத்திய கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்களை பெரான் ஏ. மற்றும் ஸ்லோவாக்கிய நபர் ஆகியோர் தங்களது திட்டங்களை செயல்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என சட்ட அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.








