ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு முன்னர், புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் குற்றம் சாட்டும் வகையிலான வாக்குமூலங்களை அளிக்குமாறு சந்திரசேன மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
புலனாய்வாளர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படும் வாக்குமூலங்களைப் பெறும் முயற்சியில், சந்திரசேனவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும், அதிகாரிகளால் மனரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களை அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரும் நியாயமான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும், விசாரணைகளின் போது அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சூழலில் நெற்றாமையை தினம் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய சூழலில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








