பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள லக்கி மாவட்டத்தின் சாரை நவ்ரங் எனும் இடத்தில் உள்ள சந்தை ஒன்றில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த குண்டுவெடிப்பில் 2 பொலிஸார் ஒரு பெண் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் வரை காயமடைந்துள்ளனர்,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இவ்வாறு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதேவேளை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ‘தெஹ்ரிக் இ தலிபான்’ என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்கள் அமைப்பு ‘தெஹ்ரிக் இ தலிபான்’ என்ற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்தும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








